காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று (11) திங்கட்கிழமை தரையிறங்கிய டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததையடுத்து, விமான நிலையம் ஒரு மணி நேரம் மூடப்பட்டதாகவும், விமானத்தில் இருந்த 288 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து 277 பயணிகள் மற்றும் 11 ஊழியர்களுடன் வந்த ‘ஏர்பஸ் ஏ330’ ரக விமானம், காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானத்தின் வலதுபுற பின் சக்கரங்களில் தீப்பிடித்ததைக் கவனித்த அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவசரகால வாயில்கள் வழியாகப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நேபாள சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பேச்சாளர் ஞானேந்திர புல் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமானம் ஓடுபாதையில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, அதன் அடிப்பகுதியில் புகை கிளம்புவதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்.

இது தொடர்பில் டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துணைத் தலைவர் யாஹ்யா உஸ்துன் தனது எக்ஸ் தளத்தில்,

விமானத்தின் ஹைட்ராலிக் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தொழில்நுட்பப் பரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.