காலியில் பணம் மற்றும் அதிக போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

காலி, கந்தவத்தை பகுதியில்  போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் 3,222 போதை மாத்திரைகளுடன் காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (05)  பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3,222 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், இந்த மாத்திரைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ததன் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும்  ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 310 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி, கந்தவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காலி பொலிஸார், இப்போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.