இலங்கையின் கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தினால் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ், 2019/2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ‘சமுதாய நீர் அபிமானி’ திட்டத்தின் ஊடாக மொத்தம் 367 கிராமிய நீர்வழங்கல் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், கொரோனா தொற்று நிலைமை மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, இவற்றில் 175 கருத்திட்டங்கள் இதுவரை முழுமையாக நிறைவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தேவையான அளவு தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தில் இல்லாமை* கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாற்றுத் தீர்வாக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உடனடியாக நிறைவு செய்ய வேண்டிய 48 அவசரமான கருத்திட்டங்கள் தொடர்பில், சாத்தியவள ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள், அடிப்படைத் திட்டங்கள் மற்றும் பொறியியல் வரைபடங்கள், பெறுகை ஆவணங்கள் தயாரித்தல், கருத்திட்ட கண்காணிப்பு உள்ளிட்ட தொழிநுட்ப சேவைகள் 2026 – 2027 காலப்பகுதியில் மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று (3) செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த தீர்மானத்தின் மூலம், நீண்ட காலமாக நிறைவுபெறாமல் இருந்த கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்கள் விரைவாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





