வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக வெல்லவாய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், தாக்கப்பட்ட பெண்ணை வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நெடொலகம, வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை இடம்பெற்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பி ஓடியுள்ள நிலையில், சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





