குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம்

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே நகர்த்தல் பத்திரம் மூலம் நடைபெற்று கொண்டிருந்த குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (08) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகளின் பின்னர் சட்டத்தரணி தனஞ்சயன் கருத்து தெரிவிக்கும் போது,

குருந்தூர்மலை வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த தவணையிலே பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்தோம்.

அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது. இன்றையதினம் தொல்லியல் திணைக்களம், சட்டமா திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றியிருந்தார்கள்.

இந்நிலையில், தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபடதடை செய்ய இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆலய பரிபாலனசபை மக்கள் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் பலரும், ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக பல சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆதிசிவன் ஐயனர் ஆலயம் சார்பாக இந்த வழக்கில் தோன்றியிருந்தார்கள். இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக இந்த வழக்கானது எதிர்வரும் 31.08.2023 க்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.