“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து கொடுத்த மூவரும் பிணையில் விடுதலை

டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்கு போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை (06) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்கு 3 போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட மூவர் பேரில்  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.