கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது!

கைவிலங்குடன்  பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸார் கடந்த 18 ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குடன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

வத்தேகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் சோதனை நடவடிக்கையில் தப்பிச் சென்ற சந்தேக நபர் கண்டி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் தனது கைகளில் இருந்த கைவிலங்கை தனது நண்பனின் உதவியுடன் நீக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் அவரது நண்பனும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.