கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : முழுக் கடையடைப்புக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு !

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித‌ எச்சங்கள், உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாருடையவை? என்பன‌ குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 28) முழுக் கடையடைப்பு நடாத்துவதற்கு வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதே தினத்திலே வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட‌ செயலகத்தினை சென்றடையும் வகையிலான‌ ஒரு பேரணியும் இடம்பெறவுள்ளது.

இந்த முழுக் கடையடைப்புக்கும் பேரணிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் வழங்குகிறது.

இருப்பினும் இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்திலே பல்வேறு மனிதப் புதைகுழிகள் சூரியக்கந்த, செம்மணி, யாழ்ப்பாணத்தின் துரையப்பா விளையாட்டரங்கு, மாத்தளை, களுவாஞ்சிக்குடி மற்றும் மன்னார் போன்ற இடங்களிலே கண்டுபிடிக்கப்பட்டன‌.

மேலும் இலங்கையினை ஆட்சி செய்த‌ அரசுகள் இன ரீதியாகவும், மத ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே போராடிய பல்வேறு இயக்கங்களையும், அமைப்புக்களையும் சேர்ந்தோர் சட்டத்துக்குப் புறம்பான முறையிலே, இராணுவமயமாக்கப்பட்ட சூழலிலே படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன் மனித உரிமைகளை முன்னிறுத்திச் செயற்பட்ட செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும், மாற்றுக் கருத்தினைக் கொண்டிருந்த வெவ்வேறு போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட‌ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை இன்று வரை நீடிக்கிறது.

இவ்வாறு போராட்டங்களிலே ஈடுபட்டுவர்களினதும், செயற்பாட்டளர்களினதும், பொதுமக்களினதும் உடலங்களின் எச்சங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

நாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உடலங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா என்ற பயம் அவர்களின் உறவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

இந்தப் புதைகுழிகள் பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையினை ஆட்சி செய்த அரசுகள் நம்பகமான எந்தச் செயன்முறையிலும் ஈடுபடவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் வேதனையினை அனுபவித்து வருவதுடன், கடுமையான‌ பொருளாதாரச் சுமையினையும், அரசின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியிலே கண்டுபிடிக்கப்பட்ட உடைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகளாக இருக்கின்றன. சரணடைந்த‌, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியினை முன்வைத்து, நீதி கோரும் வகையில், அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் பல வருடங்களாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

புதைகுழிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலே பயத்தினையும், வேதனையினையும் அவர்களின் குடும்பத்தவர் மத்தியிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை இடம்பெறும் முழுக் கடையடைப்பும், பேரணியும் கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி குறித்து நாட்டினதும், உலகினதும் கவனத்தினையும் ஈர்க்கும் வகையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசிலே வேரூன்றிப் போயிருக்கும் சட்டத்துக்குப் புறம்பான கொலை செய்யும் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலே அமைகின்றன.

எனவே இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களும், தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

கொக்குத்தொடுவாய்ப் புதைகுழி குறித்தும், நாட்டிலே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய புதைகுழிகள் குறித்தும் முறையான, நேர்மையான‌ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தப் புதைகுழிகளுக்குப் பின்னணியாக இருந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

அத்துடன் வடக்குக் கிழக்கிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு உடனடியாக மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதுடன், அவர்களிற்கான நீதியும் கிடைப்பதற்கு வழி செய்யப்படல் வேண்டும்.

இதேவேளை குறித்த இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முழுக் கடையடைப்புக்கும் பேரணிக்கும் தனது முழுமையான ஆதரவினை வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.