இதுவரையில் நாடளாவிய ரீதியில் பல ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும். அதனூடாகவே பல உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
மறைந்த மூத்த ஊடகவியலாளர் மிக அமைதியானவராக இருந்தாலும், அவர் ஒரு இலட்சியவாதியாகத் திகழ்ந்தார் என்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது. அவர் தனது வாழ்நாளை சமூகப்பொறுப்புடன் கழித்த ஒருவராக இருந்தார்.
பொதுவாக ஊடகவியலாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களது வாழ்வின் ஏதேனுமொரு தருணத்தில் ஏதேனுமொன்றை சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலையேற்படும். அந்த சமரசம் இரண்டு வகையில் இருக்கலாம். ஒன்று இலட்சியத்தை அடைந்துகொள்வதற்காக முதலில் பதுங்கிப் பாய்வதாக இருக்கலாம். இரண்டாவது எவ்வித நிபந்தனைகளுமின்றி முழுமையாக சரணாகதி அடைவதாக இருக்கலாம்.
இருப்பினும் பாரதி தமிழ்ச்சமூகத்தின் நலனை மனதிலிருத்தி ஆக்கபூர்வமான விடயங்களில் சமரசம் செய்துகொண்டார். உதாரணமாக தினக்குரல் பத்திரிகையின் உரித்தை வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கிய வேளையில் ஏற்பட்ட முரண்பாடுகளை சுமுகமாகத் தீர்ப்பதில் பாரதி முக்கிய பங்கு வகித்தார்.
ஒரு பத்திரிகை நிறுவனத்தை நடாத்திச்செல்வது என்பது அத்தனை இலகுவான விடயமல்ல. எனவே அன்று அவர் செய்த சமரசத்தின் விளைவாக இன்று தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கென இரு பிரதான பத்திரிகைகள் இருக்கின்றன.
அதேவேளை நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பலத்த உயிரச்சுறுத்தல் நிலவிய காலப்பகுதியில் ஊடகத்துறைக்குள் பிரவேசித்து, சுமார் 40 ஆண்டுகாலம் அதில் கோலோச்சிய பாரதி, அந்தத்துறையில் எவ்விடத்திலும் சமரசம் செய்துகொள்ளவில்லை.
மறுபுறம் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கண்டறியவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை முன்னிறுத்தி அண்மையில் சில கைதுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதேவேளை கடந்தகாலங்களில் பல ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும். அதனூடாகவே மேலும் பல உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என்றார்.





