கொழும்பு நீச்சல் கழகத்தின் தடாகத்தில் மூழ்கிய சிறுவன் மரணம்

இலங்கை தலைநகரில் உள்ள ஒரு நீச்சல் கழகத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விருந்தில் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய படசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை, புனித தோமையர் கல்லூரியில் கற்கும் எட்டு வயது மாணவன், செப்டெம்பர் 28 அன்று கொழும்பு நீச்சல் கழகத்தில் (Colombo Swimming Club) மூழ்கி விபத்தினை எதிர்நோக்கியிருந்தார்.

இந்த விடயத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையை பொலிஸார் இன்னும் அறிவிக்கவில்லை.

வெலிகம நகரசபையின் முன்னாள் மேயரும் சமூக ஊடக ஆர்வலருமான ரெஹான் ஜெயவிக்ரம, உயிருக்காக பத்து நாட்கள் போராடிய ஆர்லன், ஒக்டோபர் 7 செவ்வாய்க்கிழமை காலமானதாக தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சிறுவன் விபத்துக்குள்ளான விடயத்தில் பெற்றோர் மீது பலிபோட நீச்சல் கழகம் மேற்கொண்ட முயற்சியை, விபத்தில் சிக்கிய மாணவர் கற்கும் மொரட்டுவை புனித தோமையர் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரெஹான் ஜெயவிக்ரம சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

கொழும்பு நீச்சல் கழகத்தின் அலட்சியத்தால் 8 வயது சிறுவன் விபத்துக்குள்ளானதாக ரெஹான் ஜெயவிக்ரம மேலும் குற்றம் சாட்டியிருந்தார்.

உயிர்காக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் மற்றும் கழகத்தின் விதிகளைப் பின்பற்றத் தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக செப்டெம்பர் 28, 2025 அன்று நடந்த விபத்து தொடர்பாக அதன் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அளித்த அறிக்கையில் கொழும்பு நீச்சல் கழகம் குறிப்பிட்டிருந்தது.

சிறுவனை நீச்சல் கழகம் வைத்தியசாலைக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை எனவும், உடற்பயிற்சி நிலையத்தில் இருந்த ஒருவரே சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரம பதிவிட்டிருந்தார்.