கொவிட் தொற்றில் மரணித்த சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொவிட் குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் தனது கேள்வியின்போது,
கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு கொவிட் குழு எடுத்த தீர்மானம் வைராக்கியமிக்க குற்றமாகும். அதனால் இவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதனால் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட கொவிட் குழு அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள தயாரா? ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு தீர்மானத்தை எடுக்காத நிலையில், பிழையான விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு பாரிய தாக்கத்தை வழங்கிய இந்த அதிகாரிகள் தொடர்பாக குறைந்தபட்சம் அமைச்சரவை மட்டத்திலாவது விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என கேட்டார்.
அதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்து பதிலளிக்கையில், அந்த குழு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த ரவூப் ஹக்கீம், பிழையான தீர்மானம் மேற்கொண்ட குழுவின் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறே நான் பகிரங்கமா கேட்கிறேன். அதனால் இதனை நீங்கள் செய்வீர்களா?
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், ஆம், அது தொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.