கோடி ரூபாய் பெறுமதியான களைக்கொல்லி மருந்துகளோடு இரு மீனவர்கள் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட, தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை கடற்படையினர் கைப்பற்றியதோடு, கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 2 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (29) கல்பிட்டி விஜய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக மீன்பிடிக் கப்பலொன்றின் மூலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகளும் பூச்சிக்கொல்லிகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுபவை எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 22 மூடைகளில் பொதியிடப்பட்டிருந்த களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.