சட்டவாக்கத்துறை கோழைத்தனமாகியுள்ளது

சட்டவாக்கத்துறை கோழைத்தனமாகியுள்ளது. 225 உறுப்பினர்களில் 125 பேர் அடுத்த முறை வீட்டுக்குச் செல்வார்கள்.

ஊழல் மோசடியற்றவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை வழங்க வேண்டும். இந்த அரசாங்கம் ஊழல் மோசடியை உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

ஊழல்வாதிகளுக்கும்,அவர்களுக்கு துணை செல்பவர்களுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான  செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் தரப்பின் உள்ளேன். மக்களாணையை கொள்ளையடித்து, பின் கதவு ஊடாக  அரசாங்கத்தில் இருக்கவில்லை. கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி விவகாரத்தில் நான் அவசரப்பட்டேன் என்று ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் நான் ஒன்று பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு பாராளுமன்றத்துக்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை.

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் கடந்த ஆண்டு அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள் தமது சொத்துக்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார்கள்.

பண்டாரநாயக்கா, ரத்வத்தே உள்ளிட்ட குடும்பங்களை அவ்வாறு குறிப்பிடலாம். ஆனால் 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் திறைசேரியில் இருந்ததை தமது வீட்டுக்கு கொண்டு சென்றார்கள். நான் அனைவரையும் குறிப்பிடவில்லை. தொப்பியின் அளவு சரியாக உள்ளவர்கள் அணிந்துகொள்ளலாம்.திறைசேரியை வீட்டுக்கு கொண்டு சென்றதன் பிரதிபலனால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

இந்த அரசாங்கம் சட்ட ரீதியில்  ஊழல் மோசடிக்கு துணைச் சென்றுள்ளது. நான் பாராளுமன்ற மற்றும் அமைச்சு பதவிகளுக்கான மாத கொடுப்பனவுகளையும், எரிபொருளுக்கான கொடுப்பனவுகளையும் பெறுவதில்லை.

ஆனால் அந்த அரசாங்கம் என்னை வெளியேற்றி விட்டு ஊழல் பக்கம் அமர்ந்துள்ளது. இதுவே உண்மை. ஊழல் மோசடியை உத்தியோகப்பூர்வமாக இந்த அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

சட்டவாக்கத்துறை கோழைத்தன்மையாகியுள்ளது. பல வழிமுறைகளில் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.ஊழலை எடுத்துரைத்ததால் பல்வேறு வழிகளில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன்.

காமினி திஸாநாயக்க,லலித் அத்துலத்முதலி ஆகியோர் கொலை செய்யப்பட்டதை போன்று ரொஷான் ரணசிங்கவுக்கும் நேரலாம், அவ்வாறு நேர்ந்தால் யாரும் பொறுப்புக் கூற போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 40 ஆண்டுகாலமாக ஒன்றிணைந்து செயற்பட்ட சுதத் சந்திரசிறி  குறிப்பிடுகிறார்.

எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினேன் ஆனால் இதுவரை ஒன்றும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.கணக்காளர் நாயகத்தின் அறிக்கைக்கு அமைய திருடர்களை அடையாளப்படுத்தியதால் எனது பேச்சுரிமை பாராளுமன்றத்தில்  மறுக்கப்படுகிறது.இந்த பாராளுமன்றத்தில் ஒரு சதம் மூட அரச நிதியை மோசடி செய்யாத பலர் உள்ளார்கள். ஆனால் அவர்களும் 225 உறுப்பினர்கள் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவதால் விமர்விக்கப்படுகிறார்கள்.

2024 ஆம் ஆண்டு அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த 225 உறுப்பினர்களில் 125 பேர் அடுத்த முறை வீட்டுக்குச் செல்வார்கள். சிறந்த, ஊழல் மோசடியற்றவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை வழங்க வேண்டும். ஊழல்வாதிகளுக்கும், அவர்களுக்கு துணை செல்பவர்களுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.