சட்டவிரோதமான சொத்துக்கள் அரசுடமையாகும்

சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பிற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அந்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும், முறைகேடான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்குமான அதிகாரம் உள்ளது என்று    நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அந்த அதிகாரத்தை,  ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவுக்கும், நீதிமன்றங்களுக்கும் வழங்கும் வகையிலான விதிமுறைகள் சட்டமூல ஏற்பாடுகளில் உள்ளன என்றார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரசு  தயாரித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஆரம்ப பணிகள் நல்லாட்சி அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.நீதியமைச்சர் என்ற ரீதியில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொண்டேன்.

2018 ஆம் ஆண்டு நல்லாட்சி  அரசின் அமைச்சரவையில் இருந்து நான் நீக்கப்பட்டதை தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு சட்டமூல பணிகள் இடைநிறுத்தப்பட்டன.கால மாற்றத்தை தொடர்ந்து மீண்டும் அந்த பணிகள் என்னிடம் வந்து சேர்ந்துள்ளன .வங்குரோத்து நிலைக்கு ஊழல் பிரதான காரணம் என மக்கள் உறுதியாக வலியுறுத்தினார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை இயற்ற அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது.ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம்,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதிக்கான சமூக அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினரது ஆலோசனைக்கு அமைய  ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.