சமூக பாதுகாப்பு சபையுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் மக்கள் வலுவூட்டல் அமைச்சின் அமைச்சரும் செயலாளரும் இணைந்து உடனடியான கலந்துரையாடல் ஒன்றை வழங்கவேண்டும் என கோரி ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்கவினால் இன்று (18) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் மக்கள் வலுவூட்டல் அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2020ஆம் ஆண்டு வேலையற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றவர்கள் தற்போது இலங்கை சமூக பாதுகாப்பு சபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றி வருகின்றனர். எனினும் அவர்கள் பல்வேறு தொழில்சார் மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நியமனங்கள் வழங்கப்பட்டபோது பட்டதாரிகளின் கல்வித் தகைமைகள் அல்லது விருப்பங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் சேவைக்கு பதிலாக தற்போது ஓய்வூதியம் பெறாத பொதுமக்களிடமிருந்து பங்களிப்பு பணத்தை சேகரிக்கும் பணியே அவர்களது பிரதான கடமையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் தன்னார்வ அடிப்படையில் இந்த திட்டத்தில் பங்களிக்க விருப்பம் காட்டாத நிலை காணப்படுகிறது.
ஆரம்பத்தில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுதல் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கள மட்ட உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது மட்டுமே தங்களது பொறுப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது காப்புறுதி முகவர்களைப் போன்று பணம் சேகரிக்கும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இலக்குகளை நிறைவேற்ற முடியாத நிலையில், செயற்பாடு குறைவாக உள்ளதாக கூறி பிரதேச செயலாளர்களால் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட சேவை ஆவணங்களில் பாதகமான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உறுப்பினர் சேர்ப்பு தொடர்பான தவணை பணத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் வழங்கப்பட்டிருந்த 120 முதல் 150 வரையான உறுப்பினர் சேர்ப்பு இலக்கு திடீரென 450 முதல் 550ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழலில் அந்த இலக்குகளை அடைவது சாத்தியமற்றதாக உள்ளது. உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 19 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக, அவர்களிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும் பெருமளவில் குறைந்துள்ளது.
அதிகமான மற்றும் நியாயமற்ற இலக்குகளை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் காரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பலர் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையிலிருந்து விலக விரும்பும் உத்தியோகத்தர்களுக்குக் கூட மாற்று நபர் ஒருவர் இல்லை என கூறி வெளியேற அனுமதி வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.
மேலும் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்திருந்த போதிலும், 2025ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவேண்டிய சம்பள அதிகரிப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை என்பதுடன், சேவை நிரந்தரப்படுத்தல் கடிதங்களும் எந்தவிதமான தெளிவான காரணமும் இன்றி தாமதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுநபர் ஒருவரை வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின்றி இடமாற்றம் அல்லது துறைமாற்றம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
அச்சுறுத்தல் அடிப்படையிலான உறுப்பினர் சேர்ப்பு இலக்குகளை உடனடியாக நிறுத்தி மாதாந்தம் நடத்தப்படும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உத்தியோகத்தர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யவேண்டும்.
அத்துடன் தாமதப்படுத்தப்பட்டுள்ள சேவை நிரந்தரப்படுத்தல் கடிதங்களை உடனடியாக வழங்குவதோடு 2025ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள சம்பள அதிகரிப்புகளையும் உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் மக்கள் வலுவூட்டல் அமைச்சின் அமைச்சரும் செயலாளரும் இணைந்து உடனடியான கலந்துரையாடல் ஒன்றை வழங்கவேண்டும் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



