”சம்பளப் பிரச்சினைக்காக பதவி விலக மாட்டேன்”

சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் மாத்திரமே பதவியில் இருந்து விலகுவதாகவும், நிறுவனத் தலைவர் என்ற வகையில் ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

“ஆளுநர் என்ற முறையில் எனது ஊழியர்களுக்கு எனக்கு பொறுப்பு உள்ளது. எப்போதும் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பின் கீழ் இந்த சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளது”.

“மத்திய வங்கி மட்டுமின்றி ஏனைய அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் தங்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களைப் பற்றி சிந்திக்கின்றன. நெருக்கடியால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முரண்பாடுகள் இருக்க முடியாது. நிதிச் சபை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேசியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“இது ஊழியர்களின் நலனுக்காக இரு தரப்பினரும் கூட்டாக எடுத்த முடிவு, எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மறுபரிசீலனை காரணமாக நான் வெளியே முடியாது, இந்தப் பதவியினால் நாட்டிற்கு என்னால் எதுவும் செய்ய முடியாவிட்டால் இந்த வேலையை விட்டுவிடுகிறேன்.

“ஊதியத்தை உயர்த்த பொருளாதாரம் சீராகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இங்கு சம்பள உயர்வு பிரச்சனை இல்லை.சம்பளத்திற்காக உயர்த்தப்பட்ட தொகை தான் பிரச்சனை.சம்பள உயர்வு நியாயமானதா இல்லையா என்பதை குழு முடிவு செய்யும். அதை நாங்கள் கவனிப்போம்” என்று ஆளுநர்  கூறினார்.