சம்மாந்துறையில் காவல் துறையைத் தாக்கி தப்பியோடிய பிடியாணை சந்தேகநபர் உட்பட இருவர் கைது

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை  பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர், போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த 36 வயதுடைய சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்தபோது பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டார்.

அச்சமயம், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகச் சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். எனினும், பொலிஸார் தமது உயிரைப் பணயம் வைத்து நடத்திய நீண்ட தேடுதலின் பின்னர் அவரை மீண்டும் மடக்கிப் பிடித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்.

நீண்டகாலமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு மிக நுணுக்கமான முறையில் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த 25 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரையும் பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் சட்ட நடவடிக்கைக்காகச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் கீழ், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சியின் வழிநடத்தலில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.