சம்மாந்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பின்புறத்தில் காணப்படும் வயல்வெளிப் பகுதியில் புதன்கிழமை (01) கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வயல்வெளி பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டபோது, சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்ததாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் உயிரிழந்தவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த, 50 வயதுடையவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நபரின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், சட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.



