தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சர்ச்சைக்குரிய மருந்துகளில் பற்றீரியா கழிவுகள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தால் சுகாதாரத்துறைக்குள் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றிருக்காது என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுகாதாரத்துறையுடன் சார்ந்த தரப்பினரை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் சுகாதார துறையை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதுடன், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும்.
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் நேரடியாக தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கிறோம்.
தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சர்ச்சைக்குரிய மருந்துகளில் பற்றீரியா கழிவுகள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மருந்துகளையும் தற்காலிமாக பயன்படுத்தவும், விநியோகம் செய்யாமல் இருக்கவும் தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த மருந்துகளை பாவனையில் அப்புறப்படுத்த 3 மாதங்கள் கடந்துள்ளன. மரணம் ஏற்பட்டு அது தொடர்பிலான அறிக்கைகளை வெளியிட 2 மாதங்கள் எடுத்துள்ளன.. குறித்த இரண்டு மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது பாவனையில் இருந்து நீக்கப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தற்போது வெளியாகியுள்ள பரிசோதனைகள் மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் அல்ல.
இந்த பரிசோதனைகளை கடந்த மே மாதம் அல்லது குறித்த மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்வதற்கு முன்னதாக மேற்கொண்டிருந்தால் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்காது. மரணங்களும் பதிவாகியிருக்கிறது.
சுகாதார அமைச்சர் இந்த பிரச்சினை தொடர்பில் மக்கள் சார்பில் செயற்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு அவர் செயல்பட வில்லை என்றார்.