இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட தகவல் என, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வழிகாட்டல்கள் மற்றும் அறிவித்தல்கள் முற்றிலும் போலியானவை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய வதந்திகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிகன்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் அறிவித்தல்” என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு சில வழிகாட்டல்களை வழங்குவது போன்ற பதிவுகள் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பொலிஸார் பொதுமக்களுக்கு ஏதேனும் அறிவித்தல்களை வழங்க வேண்டுமாயின், அவை பொலிஸ் ஊடகப் பிரிவினால் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் ஊடக அறிக்கைகளாகவே வெளியிடப்படும்.
மேலும், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் கணக்கு வாயிலாகவே நாளாந்த அறிவித்தல்களும் தகவல்களும் பதிவேற்றப்படும். பொலிஸாரால் வெளியிடப்பட்டது என குறிப்பிட்டு, இவ்வாறான வதந்திகளை பகிர்வதன் பிண்ணனியில் ஏதேனும் திட்டமிட்ட செயல்கள் உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இவ்வாறான பதிவுகளின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.





