சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்

சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை நிதி ஆணைக்குழுவின் தவிசாளர் சுமித் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணம் மிக நீண்ட காலமாகப் போரின் தாக்கங்களை எதிர்கொண்டதொரு மாகாணமாகும். எனவே, இங்குள்ள சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பல சிறுவர்கள் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த நிலையில் வாழ்கின்றனர். ஏனைய சிறுவர்களை விட இவர்களுக்கான தேவைப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகவும் விசேடமானவை.

இன்றும் பல சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். இல்லங்களில் இல்லாத போதிலும், சமூகத்தில் பல சிறுவர்களுக்கு எமது உதவிகள் தேவைப்படுகின்றன. வறுமை காரணமாக எந்தவொரு சிறுவனும் தனது கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் அதீத அக்கறை கொள்ள வேண்டும்.

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல் | Governor N Vedhanayagan S Insistence

 

மேலும், சிறுவர்களை இலக்கு வைத்து சமூகப் பிறழ்வுகள் அதிகரித்து வரும் தற்காலச் சூழலில், அது தொடர்பில் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் இருக்கிறது.

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.