சிறுவர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு, சிறுவர் பாதுகாப்புக்காகச் செயற்படும் நிறுவனங்களில் நிலவும் ஊழியர் வெற்றிடங்களே முக்கிய காரணம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றில் கடுமையான உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட பன்முகக் கட்டமைப்பு, இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலாண்மை சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவை, ஒரு சுயாதீன பிரிவாக மாற்றுவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத சிறுவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சிறுவர் மேல் நீதிமன்றங்களை நிறுவுவதன் மூலம், சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, அவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்குவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.





