சீன சேதன பசளை இறக்குமதியால் 6.8 மில்லியன் டொலர் இழப்பு – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

சீனாவில் இருந்து தரமற்ற சேதன பசளை இறக்குமதி செய்யப்பட்டமையால் இலங்கைக்கு 68 இலட்சத்து 73975 டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர்களிடமிருந்து இந்த நிதி இழப்பை அறவிடுமாறு கணக்காய்வாளர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளைத் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.இந்த அறிக்கையின் பிரகாரம் தரமற்ற சேதன பசளை இறக்குமதியினால் இலங்கைக்கு 68 இலட்சத்து 73975 டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமற்ற சேதன பசளையை இறக்குமதி செய்து நிதி இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து குறித்த நிதி இழப்பை அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கணக்காய்வாளர் அலுவலகம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்த சேதன பசளை இறக்குமதி விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. இரு தரப்பு நிறுவன மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தரமற்ற சேதன பசளை குறித்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மோசடி குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

சமீபத்திய செய்திகள்