மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் எழுந்துள்ள மருந்துகள் கொள்முதல் செயல்முறை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.
சுகாதாரத்துறையின் பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பில் துரிதமாகக் கண்டறியுமாறும், அந்தச் சம்பவங்களில் சுகாதாரத் துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஏதேனும் உண்மை இருப்பின், அவற்றை உடனடியாகக் கண்டறிந்து , மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து மக்களும் இலவச சுகாதார சேவையை, எவ்வித தங்குதடையும் இன்றி வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சின் விநியோகத்தர்களுக்கு பணம் செலுத்துவதில் இந்த வருட ஆரம்பம் முதல் பெரும் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிதியமைச்சு கட்டம் கட்டமாக நிலுவைத்தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இக்கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் செலவுகளுக்கு நிதியளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளர் எவரேனும் பாதிக்கப்பட்டால், காரணம் கூறுவதை தவிர்த்து, நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதன்போது வலியுறுத்தினார்.