சுகாதாரப் பணிப்பகிஷ்கரிப்பு: விசேட வைத்திய நிபுணர்கள் ஆதரவு வழங்கவில்லை!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்இன்று (04) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் ஆர். ஞானசேகரம், தமது சங்கத்தைச் சேர்ந்த சுமார் 2,300 விசேட வைத்திய நிபுணர்களும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவார்கள் எனவும், வைத்தியசாலைகளின் விசேட சிகிச்சை சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், பயிற்சிக்குப் பின்னரான விசேட வைத்தியர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். விசேட வைத்திய நிபுணர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், நோயாளர்களின் உயிரைப் பணயம் வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தமது சங்கத்தின் கொள்கையல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியல் மற்றும் பயிற்சிகளின் பின்னரான நியமனப் பட்டியல்களில் அரசியல் தலையீடுகள் மூலம் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தியே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் எப்போது நிறைவடையும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.