பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைத் கைது செய்து தடுத்து வைத்துள்ளதைச் சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனக் கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவுக்கு இடையீடு செய்து அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற வாதங்களை முன்வைக்கத் தனக்கு அங்கீகாரம் அளிக்குமாறு கோரியே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த இடையீட்டு மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், அருட்தந்தை ரோஹான் சில்வா உள்ளிட்டோரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனுவானது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மனுவானது இன்றைய தினமும், வெள்ளிக்கிழமை (17) வெள்ளிக்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறான பின்னணியில், அந்த மனுவில் மனுதாரரான சுரேஷ் சலேயை ஆதரித்து ஏற்கனவே 8 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான பின்னணியில் அந்த மனுவுக்கு எதிராக நேற்று முன்தினம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடையீட்டு மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பாக இதுவரை ஆதரவாகவும் எதிராகவும் ஒன்பது இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



