அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாம் சேகரித்த சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் அந்த சொத்துக்களை திரட்டிய விதத்தையும் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அது இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடியை பின்னணியாக கொண்டது என்றே கருதப்படும். சிறந்த முறையில் உழைத்து, சொத்து சேகரித்தவர்கள் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கும் போது நெருக்கடிக்குள்ளாகவில்லை. முறைகேடான வகையில் செயற்பட்டவர்கள் மாத்திரமே நெருக்கடிக்குள்ளானார்கள் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.
சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தல் மின்னணு கட்டமைப்பை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளோம். 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆணைக்குழுவின் சேவையாளர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் போது பல பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அனைவரும் எதிர்கொண்டனர்.சட்டத்தை தெரியாமல் இருப்பது விடுவிப்புக்கான காரணமல்ல என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம். சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் கடந்த ஆண்டு சுமார் 3 இலட்சம் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்படும் போதும் ஒருதரப்பினர் அதையும் எதிர்க்கிறார்கள்.
சட்டத்தின் பிரகாரம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணக்கருக்கருக்களை ஒருசிலர் எதிர்க்கிறார்கள்.இவ்வாறான நிலையில் நாடு என்ற அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றமடைவது.
அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாம் சேகரித்த சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் அந்த சொத்துக்களை திரட்டிய விதத்தையும் நிரூபிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் அது இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடியை பின்னணியாக கொண்டது என்றே கருதப்படும்.
சிறந்த முறையில் உழைத்து, சொத்து சேகரித்தவர்கள் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கும் போது நெருக்கடிக்குள்ளாகவில்லை. முறைகேடான வகையில் செயற்பட்டவர்கள் மாத்திரமே நெருக்கடிக்குள்ளானார்கள்.
இந்த ஆண்டு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை மின்னணு முறையில் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும். கடதாசி ஊடாக சமர்ப்பிப்பதை இனி ஏற்க முடியாது என்றார்.


