சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் இந்த மத்திய மின்னணு கட்டமைப்பு, இன்று காலை 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


