சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஜூலை 7 வரை கால அவகாசம்

2026 ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மத்தியப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பிற்குள் பிரவேசித்து பதிவு செய்ய முயற்சித்த போதிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பதிவுச் செயல்முறையை நிறைவு செய்ய முடியாமல் போனவர்கள் எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு வரையான காலப்பகுதியில் எவ்வித அபராதமுமின்றி தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரங்களை சமர்ப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், இதற்கென நிறுவப்பட்டுள்ள மத்தியமாக்கப்பட்ட இலத்திரனியல் முறைமையின் ஊடாக மட்டுமே விபரங்களை சமர்ப்பிக்க முடியும்.

2026.03.31ஆம் திகதி நிலவரப்படியான வருடாந்த மற்றும் ஓய்வூதியத்திற்குப் பின்னரான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்கள், 2026.06.30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறு சமர்ப்பிக்கும் போது அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.

இருப்பினும், 2026.06.28ஆம் திகதி முதல் மத்தியமயப்படுத்தப்பட்ட அமைப்பிற்குள் ஒரே நாளில் பெருமளவிலான பயனர்கள் பிரவேசித்ததால் ஏற்பட்ட அதிகப்படியான நெருக்கடி காரணமாக, பிரகடனங்களை சமர்ப்பிப்பவர்கள் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக புகார்கள் கிடைத்துள்ளன.

இதனைக் கருத்திற் கொண்டு, 2026 ஜூன் 30 (இன்று) அல்லது அதற்கு முன்னர் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை சமர்ப்பிக்க முடியாமல்போன அதிகாரிகளுக்கும், அதேபோன்று 2026 ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மத்தியப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பிற்குள் பிரவேசித்து பதிவு செய்ய முயற்சித்த போதிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பதிவுச் செயல்முறையை நிறைவு செய்ய முடியாமல் போன அதிகாரிகளுக்கும், 2026 ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை எவ்வித அபராதமுமின்றி தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரங்களை சமர்ப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் தொடர்பான மத்திய மின்னணு அமைப்பில் விபரங்களை உள்ளிடும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து, ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் பிரிவின் 0767011954 மற்றும் 0112587287 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக மட்டுமே தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.