கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில், கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று திங்கட்கிழமை (09) சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த 03ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.



