இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரான அமரர் தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) 128வது ஜனன தினம் இன்று செவ்வாய்க்கிழமை (31) பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இன்று அன்னாரது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வு வேளையில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளர் நடராசா புஸ்பராசா, தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அன்னாரது ஜனன தின நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



மன்னார்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் அன்னாரது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அக்கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிளை உறுப்பினர்கள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1898ஆம் ஆண்டு மார்ச் 31இல் பிறந்த அவர் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார்.











