தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியின் 12 வது தேசிய மாநாட்டை உடனடியாக நடத்தி, புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை (27) திருகோணமலை மாவட்டத்தின் தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் கவனீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கட்சியின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக பதாகைகளுடன் போராட்டத்தை ஆரம்பித்த கட்சி அங்கத்தவர்கள், பின்னர் அங்கிருந்து நடைபவனியாக திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கத்திற்கு முன்பாக சென்று அங்கு தொடர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “தலைமை குழுவே! தேசிய மகாநாட்டை உடன் நடத்து”.
“தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிகாத்த கட்சியை சீரழிக்காதே!”
“ஆயுதம் ஏந்தி போராடி இரத்தம் சிந்தி, ஜனநாயக ரீதியில் அரசியல் செய்தமையா? நாங்கள் செய்த குற்றம்”
“தலைமைக்குழுவினரே! நீங்கள் ஜனநாயக விரோதிகள்!”
“கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே”
“தலைமைக்குழு உறுப்பினர்களே, பதவி ஆசைக்கா ஆயுதம் தூக்கினீர்”
“பதவி ஆசை போதும். சாகும் வரை நீங்களா?”
“ரெலோ தலைமைக்குழுவே! பதவி விலகுங்கள்! மகாநாட்டை நடத்துங்கள்!ஜனநாயகத்தை மதியுங்கள்”
“கட்சித் தலைமையே! கட்சிக்கு எதிராக வழக்கு போட்டமை, வேறு எங்கும் நடந்துள்ளதா!” என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் யாப்பு விதியின்படி தற்போதுள்ள தலைவர் உட்பட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 23.03.2026 அன்று முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக கட்சியின் 12 வது தேசிய மாநாடு கூட்டப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ் கவனீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக,போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கௌரிதாஸ் பத்மலோஜினி என்ற கட்சியின் மூத்த உறுப்பினர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“திருகோணமலை உட்பட வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தற்போது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் உட்பட தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலேயே திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவு கட்சியின் யாப்பு விதிகளின் படி நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவு, யாப்புக்கு முரணானது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதத்துடன் போடப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். எனவே இத்தகைய உட்கட்சி ஜனநாய மீறல்களை உடனே நிறுத்தி போடப்பட்டுள்ள வழக்கு மீளப்பெறப்படல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் தெரிவு அங்கீகரிக்கப்படல் வேண்டும். அதனடிப்படையில் உடனடியாக 12 வது தேசிய மகாநாடு தாமதமின்றி கூட்டப்படல் வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்று அவர் கூறினார்.
















