தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டியது அவசியம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் செயன்முறையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் முழுமையாகப் பெறவேண்டியது மிகவும் அவசியமென பலமுறை தான் அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியிருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கப்பிரதிநிதிகளுடனான இரண்டாம் கட்ட சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பிலும் கடந்த சந்திப்பைப்போன்று தாம் ஸ்தாபிப்பதற்கு உத்தேசித்துள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியினால் விளக்கமளிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் குறித்த ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இதற்கு எதிர்ப்புகள் வரக்கூடுமென அறிந்திருந்த போதிலும் அரசாங்கம் துணிச்சலாக இம்முயற்சியை மேற்கொள்வதைப் பாராட்டவேண்டுமெனத் தெரிவித்த ஜெஹான் பெரேரா, சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் மூலம் இம்முயற்சிக்குப் பரந்துபட்ட ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆலோசனைகள் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கோரப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு வழங்கப்படும் யோசனைகளை அரசாங்கம் அதன் வரைபில் உள்ளடக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய அவர், தற்போது நிறுவப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இடைக்கால செயலகத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள நபரைத் தமக்குத்தெரியாது என்றும், அவரைவிட மிகப்பொருத்தமான மேலும் பல நிபுணர்கள் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் செயன்முறையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் முழுமையாகப் பெறவேண்டியது இன்றியமையாதது என்று பலதடவைகள் தான் அமைச்சர் அலி சப்ரியிடம் எடுத்துரைத்திருப்பதாக ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

இருப்பினும் இவ்வாறான பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்று தமிழர் தரப்பு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் பின்னணியில், இவ்விடயம் குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினால், அச்செயன்முறை அந்த இடத்திலேயே தேங்கி நின்றுவிடும் என்று அரசாங்கம் கருதக்கூடும் என்று சந்தேகம் வெளியிட்ட அவர், யதார்த்த ரீதியாக நோக்குகையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய எதிர்ப்புக்கு மத்தியில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது சாத்தியமில்லை என்று விளக்கமளித்தார்.

ஆனால் இப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்குப் பதிலாக இலங்கையிலும் பிறிதொரு நாட்டிலும் இரட்டைப்பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கும் தகுதிவாய்ந்த நபர்களை உள்வாங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார்.

மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் இதுவரையில் தம்மோடு கலந்துரையாடல்களை நடத்திய அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இப்பொறிமுறை அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் எனவும் அவர் தெரிவித்தார்.