தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்புடையது. அதனால் எந்தப் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்படவில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்ததார்.
சாளரம் பத்திரிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 16 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (01-08-2023) சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், சாகதேவன் நிலக்சன் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏராளமான பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி மாணவர்கள் வீதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் யாரும் ஆயுதப் போராட்டத்தில் தொடர்புபட்டவர்கள் அல்ல. ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் துணிந்து செயற்பட்டவர்கள்.
இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டவர்கள் முழுமையான அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடுமையான இராணுவ பிரசன்னமுள்ள பகுதிகளிலேயே படுகொலைசெய்யப்பட்டனர். இவ்வாறாக நடைபெற்ற படுகொலைகளின் உண்மையும் ஆரயப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. அரசு பொறுப்புச் சொல்லவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களைக் கூட பரிகாரங்கள் ஏற்படுத்தாது சகித்துக்கொள்ளுங்கள் எனக் கூறி வேடிக்கையான நல்லிணக்கம் பற்றிக் கூறப்படுகின்றது.
இதில் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற பணியாளர்கள், மனித உரிமைகளுக்காக செயற்பட்டவர்கள்இ மாணவர் சங்க செயற்பாட்டாளர்கள் என திறமையான இளைய தலைமுறையை நாம் இழந்துள்ளோம். இவர்கள் விடயத்தில் இன்றும் நீதிக்காக ஏங்குகின்றோம். நடைபெற்ற அநியாயங்களுக்கு பொறுப்புக்கூரல் இன்றி இரண்டு மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன.
இக்காலப்பகுதியில் நியாயத்திற்காக போராடும் தாய்மாரும் உறவினரும் சாட்சியங்களும் உடல் உள தாக்கங்கள் மற்றும் வயது முதுமை காரணமாக மரணித்துபோகின்றனர். இவ்வாறே மகனுக்கான நீதிக்காக ஏங்கியவாறே நிலக்சனின் தாயும் திடீர் என மரணித்தார். இவைகள் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்கும் போர் மற்றம் போரின்பின்பான பாரதூரமான மனித உரிமை மீறல்களை மறைப்புச் செய்து அரசை வெள்ளையடிப்பதற்கான அணுகுமுறைகளே ஆகும். இவ்வாறு தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.