கொலை மற்றும் கெப் ரக வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் எல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டி – திவிதுருவத்த பகுதியில் கடந்த 2003 மார்ச் 05ஆம் திகதி, நபர் ஒருவரை கொலை செய்து, அவரிடமிருந்த கெப் ரக வாகனமொன்றைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கை விசாரித்த பலபிட்டி மேல் நீதிமன்றம், குறித்த நபரை குற்றவாளியாகக் கண்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகாது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், எல்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று திங்கட்கிழமை (16) மாலை பத்தினிகமுவ பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் எல்பிட்டிய, புவக்கொடெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




