திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்தால் புதிய அலுவலகங்கள் திறப்பு

திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்தினால் இன்று புதன்கிழமை (08) கப்பல்துறை கிராமத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் உப அலுவலகம், விவசாய போதனாசிரியர் அலுவலகம் மற்றும் கப்பல்துறை கமக்கார அமைப்பிற்கான காரியாலயம் என்பனவும் திறந்து வைக்கப்பட்டன இவற்றை திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.விஷ்னுதாசன், திருகோணமலை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஐ.எல்.பௌசூல் அமீன், உப்புவெளி கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்ஷானந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

முத்துநகர் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி நிலையம் என்பது விளாங்குளம், முத்துநகர் கப்பல்துறை கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இங்கு இருக்கின்ற விவசாயிகள் தங்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ள உப்புவெளியில் உள்ள அலுவலகத்திற்கு வருகின்றபோது போக்குவரத்திற்காக பெருமளவான நிதியினை செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே அவர்களுடைய இலகுபடுத்தல்களுக்காக கப்பல்துறை கிராமத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் உப அலுவலகம், விவசாய போதனாசிரியர் அலுவலகம் மற்றும் கப்பல்துறை கமக்கார அமைப்பிற்கான காரியாலயம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடன் அடிப்படையில் விதை நெற்களை வழங்கிவருவதாகவும் அதற்கான விற்பனை நிலையத்தையும் இன்றைய தினம்  திறந்து வைத்திருப்பதாக உப்புவெளி கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்ஷானந்தன் தெரிவித்தார்.