தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு: அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்காத அநுர!

தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ – ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம் நடைபெறும் நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு தாம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்புவிடுத்துள்ள போதிலும், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என தெற்கில் காணாமல்போனோரின் உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டளவிலே ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) எழுச்சியின்போது அதன் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இச்சம்பவங்களுக்கு மத்தியில் 1989 ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக வலய ஊழியரும், தொழிற்சங்கவாதியுமான எச்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது சட்டத்தரணி ஆகிய இருவர் கொல்லப்பட்டதன் பின்னர், அவர்களது உடல்கள் ரத்தொலுவ பகுதியில் கண்டறியப்பட்டன.

அதனையடுத்து அவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ – ரத்தொலுவ சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி, பின்னாளில் தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூருவதற்கான நினைவுத்தூபியாக மாற்றமடைந்தது.

அதன்படி தெற்கில் காணாமால்போனோரின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காணாமல்போனோரின் குடும்பங்களின் பங்கேற்புடன் வருடாந்தம் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இத்தூபிக்கு அண்மையில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெறும்.

அதற்கமைய இம்முறை எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு தாம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்ததாகவும், இருப்பினும் அதற்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பியதாகவும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை என விசனம் வெளியிட்டார்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஜனாதிபதி, இந்நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்பது குறித்து எந்தவொரு பதிலையும் வழங்காமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்