தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறை!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் காணப்படும் பாரிய ஆளணி வெற்றிடங்கள் மற்றும் பாரிய வளப்பற்றாக்குறைகள் காரணமாக தாம் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியுள்ளதுடன், வினைத்திறனான முறையில் கல்வியியற் கல்லூரியை கொண்டு நடாத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ஜி.கமலகுமார், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்துள்ளார்.

அத்தோடு இவ்வருடம் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட 38 மில்லியன் ரூபாய் நிதி திரும்பியுள்ளதால் 06 அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது கல்வியியற் கல்லூரி பீடாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.

வவுனியா கல்வியியற் கல்லூரியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கல்வியியற் கல்லூரியின் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த அழைப்பினை ஏற்று நேற்று (17) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போதே மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வருடம் வவுனியா கல்வியியற் கல்லூரியால் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் 64 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10 திருத்த வேலைத்திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட திருத்த வேலைத்திட்டங்களில் 26 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 வேலைத்திட்டங்களே செயற்படுத்தப்படவுள்ளதாகவும், ஏனைய திட்டங்களுக்குரிய நிதி திரும்பியுள்ள நிலையில் 06 திருத்தவேலைத் திட்டங்களை செயற்படுத்த முடியாத துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி ஜி.கமலகுமார் அவர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறந்த வகுப்பறைத் திருத்தம், 1.8மில்லியன் ரூபாய் பெறுமதியான உள்ளக மின் இணைப்பு வேலை, 20 மில்லியன்ரூபாய் பெறுமதியான வகுப்பறைத் திருத்தம், 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான விரிவுரையாளர் விடுதித் திருந்தம், 03 மில்லியன் ரூபாய் பெறுமதியான பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதி விடுதிகளின் திருத்தம், 07 மில்லியன் ரூபாய் பெறுமதியான வடிகாலைமைப்புத் திருத்தம் என மொத்தம் 06 திருத்த வேலைத்திட்டங்களுக்குரிய 38 மில்லியன் ரூபாய் நிதி இவ்வாறு திரும்பியுள்ளதால் குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 88 ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசார் ஆளணி காணப்படுகின்றது. இருப்பினும் தற்போது 68 கல்விசார் ஆளணி குறித்த கல்வியியற் கல்லூரியில் பதிவில் உள்ளபோதும், 15 பேர் இணைப்பில் வெளிநிலையங்களில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் வவுனியா கல்வியியற் கல்லூரியில் தற்போது 53 கல்விசார் ஊழியர்களே கடமையில் ஈடுபட்டுள்ளதால் தம்மால் வினைத்திறனான சேவையை வழங்குவதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அதேவேளை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மொத்தம் 91 ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா ஊழியர்களின் ஆளணி காணப்படுகின்றபோதும், 35 கல்விசாரா ஊழியர்களே அங்கு கடமையாற்றி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக சாரதி, காவலாளி, முகாமைத்துவ உதவியாளர்கள், நூலகப் பொறுப்பாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பல ஆளணி நியமனங்கள் அறவே பூத்தி செய்யப்படாத நிலையில் வெற்றிடங்களாகவே காணப்படுகின்றன.

அதேவேளை காவலாளி, சுகாதாரப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட பல ஆளணி நியமனங்களில் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

இவ்வாறாக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்விசாரா ஊழியர்களின் நியமனங்களில் பாரியளவு வெற்றிடங்கள் காணப்படுவதால் கல்வியியற் கல்லூரியின் நிர்வாக நடவடிக்கைகளை சீராகப் பேணுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் கல்வியல் கல்லூரியின் பீடாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டது.

இது தவிர கல்வியியற் கல்லூரியிலுள்ள வாகனம் அடிக்கடி பழுதடைவதாகவும், பேருந்து பழுதடைந்து ஐந்து வருடங்களாக பயன்பாடின்றிக் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டதுடன், இலங்கையிலுள்ள 20 கல்வியியற் கல்லூரிகளில் 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் வவுனியா கல்வியியற் கல்லூரிக்கு மாத்திரம் இதுவரை வாகனங்கள் வழங்கப்படவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு கல்வியியற் கல்லூரி மாணவர் விடுதிகள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் தற்போது 06 பெண்கள் விடுதிகளும், 04 ஆண்கள் விடுதிகளுமாக மொத்தம் 10 விடுதிகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு விடுதியில் 50 மாணவர்களே தங்கியிருக்கக்கூடிய வசதிகளே காணப்படுகின்றபோதும் தற்போது மொத்தம் 10 விடுதிகளிலுமாக 704 கல்வியியற் கல்லூரி மாணவர்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தங்கியிருந்து தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

மேலும் சீரான மலசல கூடவசதிகளின்மை, விஞ்ஞான ஆய்வுகூட வசதிப் பற்றாக்குறை, நூலக வசதிப் பற்றாக்குறை, கல்வியியற் கல்லூரியின் கட்டடங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை, வடிகாலமைப்புச் சீரின்மை, கல்வியியற் கல்லூரி வளாகத்தில் மின்விளக்குப் பற்றாக்குறை, வகுப்பறைகளில் நவீன கற்றல் கருவிகளின் பற்றாக்குறை, உள்ளக வீதிகள் சீரின்மை, அனர்த்தம் ஏற்படக்கூடிய வகையிலான பாதுகாப்பற்ற மின்சார இணைப்புகள் என பல்வேறு உட்கட்டமைப்பு குறைபாடுகளும் காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியால் எடுத்துக்கூறப்பட்டது.

இவ்வாறாக வவுனியா கல்வியியற் கல்லூரியில் கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணியில் உள்ள பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகளிலுள்ள குறைபாடுகள் காரணமாக கல்வியியற் கல்லூரியை வினைத்திறனான முறையில் இயங்கச் செய்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதுடன், அபிவிருத்தி வேலைகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 35 மில்லியன் ரூபாய் நிதி திரும்பியிருப்பது தமக்கு பேரிடியாக அமைந்துள்ளதாகவும் வவுனியா கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ஜி.கமலகுமார் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கவலை தெரிவித்திருந்தார்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கல்வியியற் கல்லூரியின் உட்கட்டமைப்பு சார்ந்த குறைபாடுகள் தொடர்பில் நேரடியாக பார்வையிட்டார். அத்தோடு கல்வியியற் கல்லூரியில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகளிலுள்ள குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி நிதி திரும்பியமை தொடர்பில் உரிய இடங்களுக்கு கொண்டுசென்று உரிய தீர்வினைப் பெற்றுத்தர தம்மால் முயற்சியெடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்