தேர்தல் நடத்தை விதியை பாஜக மீறியதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

 மக்களவைத் தேர்தல் தேதி கடந்த16-ம் தேதி அறிவிக்கப்பட்டது முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் நடத்தை விதிகளை பாஜக மீறியுள்ளதாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘போல்சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜக தேர்தல் போனஸ் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்தால் ரூ.5 ஆயிரம்பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விளம்பரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-ம்பிரிவின்படி குற்றமாகும். வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ, யாருக்கும் பரிசுப் பொருளை அளிக்கவோ அல்லது கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பது லஞ்சம் ஆகும்.

இதனை அனைத்து கட்சிகளும், வாக்காளர்களும் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு பாஜக மீது நடவடிக்கை எடுத்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.