தனது அமைச்சின் கீழுள்ள ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் தமது நிறுவனத்தின் வருடாந்த வருமானம் தொடர்பில் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய பின்னரும் நிறுவனங்களில் முன்னேற்றம் காட்டாத அதிகாரிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க தான் தயங்கப் போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பத்தரமுல்லை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அரசாங்க தொழிற்சாலை தொழிற்சங்கங்களுடன் இன்று (12) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
கொலன்னாவையில் அமைந்துள்ள அரச தொழிற்சாலைத் திணைக்களம் ஏறக்குறைய நூறு வருட வரலாற்றைக் கொண்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் சீருடையில் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ முத்திரைகள், ஏரிகளுக்கான வான் கதவுகள், வைத்தியசாலை உபகரணங்கள், கைவிலங்குகள், வாக்குப் பெட்டிகள் போன்றவை இந்த திணைக்களத்தினால் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், திணைக்களத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகளின் மோசமான நிர்வாகத்தினாலும், முறையற்ற நிர்வாகத்தினாலும், திணைக்களம் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தொழிற்சங்க ஒன்றியம் அமைச்சரிடம் சுட்டிக் காட்டியது.
இதனால் அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களத்தை தொடர்ந்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய தொழிற்சங்க பிரதிநிதிகள், திணைக்களத்தை பாதுகாக்கும் வகையில் அதனை மறுசீரமைக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டினர்.
அவ்வாறானதொரு தீர்மானத்தை திடிரென எடுப்பதற்குப் பதிலாக, திணைக்களத்தைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி சில வேலை ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு குறிப்பிட்டார்.
அந்த நோக்கத்திற்காக, நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் பற்றிய விரிவான அறிக்கையை வழங்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்,
இந்த நிறுவனங்களை கட்டி எழுப்ப முடியும். கடந்த காலத்தில், நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இப்போது நாம் மெதுவாக தலையை உயர்த்துகிறோம்.
நாட்டுக்கு தேவையான வளங்களை அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களம் உற்பத்தி செய்ய முடியும். மாகாண சபைகளும் உள்ளூராட்சி நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை ஆரம்பித்துள்ளன.
அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு இந்த நிறுவனத்தை எப்படியாவது மீட்க முயற்சிப்போம்.
அரசியல் செல்வாக்கினால் மட்டும் பல நிறுவனங்கள் அழிக்கப்படவில்லை. அதிகாரிகளின் வாக்குவாதத்தினாலும் அழிக்கப்படுகின்றன.
லஞ்சம், ஊழல், வீண் விரயம் என்று நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரையும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வீழ்ச்சியால் பாதிக்கப்படுவது அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் சிறிய தொழிலாளி ஒரு ஆணியைக் கொண்டு சென்றாலும் அவருக்கு கடிதம் அடித்து விலக்குவார்கள். ஆனால், அதிகாரிகள் தவறு செய்தால், அதைப் பற்றி பேச ஆளில்லை, இந்த பல அரச நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பொறுப்புக் கூற வேண்டும்.
அதனால்தான் நிறுவனத் தலைவர்கள் தங்கள் நிறுவனத்திலிருந்து வருடாந்த வருமானம் ஈட்டுவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி, முன்னேற்றத்தைக் காட்டுங்கள். இல்லை என்றால் அந்த அதிகாரிகள் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன்.
ஒரு அரசியல்வாதியாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறுவனத்தை காப்பாற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியலை மறந்து ஒரே கருத்துக்கு வந்து என்னுடன் கலந்துரையாடியதால், அந்த அணுகுமுறை மாற்றம் அவசியம்.
சில நேரங்களில் நாம் ஒரு படி பின் தள்ளப்படுவோம் நல்ல நோக்கத்துடன் செய்யப்படுவதால் அது தோல்வியல்ல. ஒரு நிறுவனத்தை உருவாக்க, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து யோசனைகள் மற்றும் ஆலோசனைகளையும் பெற வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் வேலை மற்றும் அமைப்பு பற்றி அறிந்தவர்கள். ஒருவேளை நாம் நிர்வாக விதிமுறைகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அந்த முடிவுகளை நாங்கள் எடுப்போம். உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அதனால் என்னுடன் பேசுங்கள். என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.