பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளை அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும் என கடந்த அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட பகுதிகளில் தோட்டத் தொழில் செய்பவர்கள் மற்றும் தோட்ட தொழில் செய்யாதவர்கள் என்ற இரண்டு தரப்பினர் உள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகள் தோட்டத்தில் வேலை செய்வதில்லை. இந்நிலையில் இப்போது மலையகத்தில் தோட்டங்களில் முன்பள்ளிகள் இயங்குகின்றன.
அங்கு தோட்டத்தில் வேலை செய்யாதவர்களின் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளாத நிலைமை காணப்படுகின்றது. சிவில் அமைப்பொன்று நடத்தி வந்த முன்பள்ளிகள் வலுக்கட்டாயமாக முகாமைத்துவத்தால் பரிக்கப்படுகின்றன. இதனால் இது தொடர்பில் பிரதமர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை மலையத்தில் 10 இலட்சம் பேரில் ஒரு இலட்சத்திற்கும் குறைவானவர்களே தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். ஆனால் தோட்டத்தில் வேலை செய்யாமல் வேறு துறைகளில் வேலை செய்பவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் வேலை செய்யாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. உதவிகள் வழங்கப்படுவதில்லை.
பெருந்தோட்ட நிறுவனங்களில் வசிப்பவர்கள் அது தொடர்பான ஒப்பந்தந்தின்படியே இருக்கின்றனர். அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகளாகவே இருக்கின்றனர். இது தொடர்பில் நாங்கள் கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை பத்திரமொன்றை நிறைவேற்றினோம்.
அதாவது பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளை அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே அந்த யோசனையாகும். இன்று அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அன்றி பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே அங்கு இருக்க முடியுமென்று கூறுகின்றனர். இதனால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியை வெளியிடுங்கள். அப்போதே நியாயமான சம்பளத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இது கிடைப்பதில்லை. பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன. இதனால் அது தொடர்பான கையெழுத்து ஆவணத்தையும் வெளியிட வேண்டும் என்றார்.



