நக்கிள்ஸ் மலைச்சாரலில் அடிக்கடி காட்டுத்தீ : விஷமிகள் காரணமா?

கண்டி – மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உலக மரபுரிமைகளில் ஒன்றான நக்கிள்ஸ் மலைச்சாரலில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. இது திட்டமிட்ட விஷமிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையா என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர், சட்ட விரோதமாக வன விலங்குகளை  வேட்டையாடச் செல்வோர் மற்றும் உள்ளூர் சுற்றலாத்துறையினர் போன்றவர்கள் தமது தேவைகளுக்காக உருவாக்கும் தீ பரவி, அது காட்டுத்தீயாவதாக பலர் கூறி வருகின்றனர்.

இருப்பினும், இது பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் வெளியாருக்கு தடை செய்யப்பட்டுள்ள பிரதேசமாகும்.

உடதஞம்பறையை அண்மித்த நக்கிள்ஸ் மலையின் கிழக்குப் பகுதியிலே அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் வன விலங்குகள் பாதிப்படைவதுடன் பெறுமதி மிக்க தாவர இனங்கள் அழிவடைகின்றன. மத்திய மலைநாட்டின் முக்கிய  நீரேந்து பிரதேசமான அங்குள்ள நீரூற்றுக்கள் பாதிப்படைய இது காரணமாகிறது.

சுற்றாடல் சம நிலை மற்றும் உயிரியல் சமநிலை போன்றவற்றில் முக்கிய பங்காற்றும் நக்கிள்ஸ் மலைச்சாரலைப் பாதுகாக்க, உரிய தரப்பினர் முன்வரவேண்டும் என ‘தும்பறையைப் பாதுகாக்கும் அமைப்பு’  உட்பட பல சுற்றாடல் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.