சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த முயன்ற சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 நட்சத்திர ஆமைகளுடன் இரு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (02) காலை கட்டுநாயக்க விமான நிலைய வெளிச்செல்லும் முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் செல்லப்பிராணிகள் விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (02) அன்று காலை 07.40 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் ஈரத்துணிகளால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆமைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள மற்றும் அழிந்துவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த ஆமைகள், சர்வதேச வர்த்தகத்தில் தடைசெய்யப்பட்ட இனமாக பட்டியலிடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பயணிகள் இருவரும் திங்கட்கிழமை (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்கவும், மீட்கப்பட்ட ஆமைகளை முறையான பராமரிப்புடன் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




