நாடாளுமன்றத்தில் தீயிடப்பட்ட தமிழர் தீர்வுத் திட்டம் தேர்தலை நடத்தி அதிகாரப்பகிர்வை வழங்குங்கள்

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு உணர்ச்சிவசப்படாமல் தர்க்கரீதியாகச் சிந்திக்க வேண்டியது அவசியமானது என்றும், மாகாண சபை தேர்தல்களை நடத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்தே அதற்கான தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தினார். வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து தீவிர முயற்சிகளையும் தாம் எடுத்திருந்தபோதிலும், நாட்டில் நிலவிய முரண்பாடான அரசியல் சூழல் காரணமாகவே அத்திட்டம் வெற்றியடையவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வுத் திட்டமொன்றைப் பாராளுமன்றத்தில் தாம் சமர்ப்பித்ததாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துத் தரப்பினராலும் ஒரு முற்போக்கான திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம், அன்றைய இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான குறுகிய அரசியல் போட்டி காரணமாகக் கைவிடப்பட்டதாகக் கவலை வெளியிட்டார்.

மேலும், பாராளுமன்ற வரலாற்றுச் சரித்திரத்திலேயே முதன்முறையாக, சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணமொன்று பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்றைய எதிர்க்கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பேரதிர்ச்சி சம்பவமாகவும் அது பதிவானதாக அவர் நினைவுகூர்ந்தார். கடந்தகாலத் தவறுகளைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதை விட, நிகழ்காலத்தில் சாத்தியமான நடைமுறைச் சாத்தியங்களை நோக்கிச் சிந்திப்பதே தற்போதைய சூழலுக்கு யதார்த்தமானது எனக் குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெறும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமன்றி, நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் உடனடியாக மாகாண சபை தேர்தல்களை நடத்தி, அதிகாரப் பகிர்வை வழங்குவதே சிறந்த வழியாகும் என்றும் தெரிவித்தார்.