நிலக்கரி மோசடியினால் ஒட்டுமொத்த இழப்பு 10,000 கோடியைத் தாண்டுகிறது – டி.வீ. சானக்க

நிலக்கரி மோசடியினால் நாட்டுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த இழப்பு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் அபாயம் நிலவுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் வியாழக்கிழமை (9) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் மற்றும் மே ஜூன் ஆகிய மாதங்களில் மாத்திரம் நிலக்கரி மோசடியினால் 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளோம். இந்த இழப்பை ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டு ஒட்டுமொத்த நட்டத்தை ஆராயும்போது அது 10,000 கோடி ரூபாயைத் தாண்டும் நிலை உள்ளது.

மேலதிக நிலக்கரிக்காக மாத்திரம் 220 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக நிலக்கரி ஏற்றிய ஒன்பது கப்பல்கள் மூலம் 141 மில்லியன் அலகு மின்சாரம் இழக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 141 மில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போது டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 125 ரூபாய் செலவாகின்றது. அந்த அலகுகளின் எண்ணிக்கையை 141 மில்லியனால் பெருக்கும் போது அதற்காக மாத்திரம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிக செலவை ஏற்க வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் நிச்சயமாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 900 மெகாவாட் மின்சாரத்தை டீசல் மூலமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக மின்சார வெட்டினையும் நடைமுறைப்படுத்த வேண்டி வரும்.

இந்த நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி ஊழல் நிறைந்தது என நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். ஆனால் ஜனாதிபதி மற்றும் சக்திவலு அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கம் அதனை மூடிமறைக்கவே எப்போதும் முயற்சித்தது. இந்த நிலக்கரி மோசடியை மறைக்க அரசாங்கம் ஏழு நலன்புரி வழிகளில் செயற்பட்டுள்ளது. புதிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையும் இந்த நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி ஊழல் நிறைந்தது என்றே கூறுகிறது என்றார்.