விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வல, திங்கட்கிழமை (16) மஹர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சரணடைந்ததை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்ததுடன், சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிப்பதாக அறிவித்தார்.
ஹெய்யன்துடுவ, தெனிமுல்ல பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில், கடந்த 13 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அசோக்க ரன்வல நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்தே அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்திருந்தார். இந்நிலையில், சட்டத்தரணிகளான பசன் குணரத்ன மற்றும் பிரேமசிறி பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மோஷன் மனுவொன்றின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல இன்று நீதிமன்றில் ஆஜராகி சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணையை நீதவான் மீளப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது, சபுகஸ்கந்த பொலிஸாரினால் சந்தேகநபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டப்பட்டது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அசோக்க ரன்வல நிராகரித்ததுடன், தாம் குற்றமற்றவர் எனவும் மன்றுக்குத் தெரிவித்தார். சந்தேகநபருக்கு எதிராக விபத்தைத் தவிர்க்காமை, கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தியமை, பயணிகளுக்குப் பாரதூரமான மற்றும் சாதாரண காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் போக்குவரத்துப் பொருத்தமற்ற நிலையில் இருந்த வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் 11 ஆம் திகதி இரவு, அசோக்க ரன்வல பயணித்த ஜீப் வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதுடன், எதிரே வந்த கார் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய தாய், 55 வயதுடைய பாட்டி மற்றும் 6 மாதக் குழந்தை ஆகிய மூவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.




