நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா ?

தற்போதைய நிலைமையில் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.

குடிநீர் கட்டண திருத்தம் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதுள்ள வறட்சியான வானிலை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளபோதும் குடிநீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை. மின்சார செலவு அதிகரிப்பது நீர் கட்டணம் தொடர்பில் நேரடி தாக்கம் ஏற்படுவதில்லை.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஒட்டுமொத்த செயற்பாட்டு செலவில் மின்சாரத்துக்காக செலவிடப்படுவது நூற்றுக்கு 20 வீதத்துக்கும் 30 வீதத்துக்கும் இடைப்பட்ட அளவாகும்.

அதேநேரம்  நீர் கட்டண திருத்தம் வருடத்துக்கு இரண்டு தடவை மாத்திரம் மேற்கொள்ளப்படும் கொள்கையாகும். வருடத்தின் முதல 6 மாதங்களில் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை.

அதன் பிரகாரம் நீர் கட்டணம் தொடர்பில் ஏதாவது மதிப்பீடு செய்வதாக இருந்தால், அது ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னரே மேற்கொள்ளப்படும் என்றார்.