நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் திங்கட்கிழமை (24) இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தமிழக கடற்தொழிலாளர்களின் 2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் ஊடாக செவ்வாய்க்கிழமை (25) 09 கடற்தொழிலாளர்களையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.