மாத்தறை தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவத் தந்தை மற்றும் மகன் இருவரையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் திகதி ‘சோமிரச’ மீன்பிடிப் படகில் கடலுக்குச் சென்ற எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோர், படகு இயந்திரக் கோளாறுக்குள்ளானதைத் தொடர்ந்து கடல் நீரோட்டத்தால் பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்து சென்றுள்ளனர்.
படகில் கண்காணிப்பு மற்றும் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் அவர்களை கண்டறிவது சிரமமாக இருந்ததுடன், கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், மீன்பிடித் திணைக்களத்தின் கணிப்பின் அடிப்படையில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் மீனவர்களால் இருவரும் மீட்கப்பட்டனர்.
தற்போது அவர்கள் சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பில் உள்ள நிலையில், மீன்பிடி, நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலையீட்டில் பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



