தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷ, Browns Hill காணி தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வைத்திய அறிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறப்படும் 50 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தி மத்தறையில் உள்ள Browns Hill ஒன்றரை ஏக்கர் காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் உடல்நல குறைவு காரணமாக பசில் ராஜபக்ஷ, விமானப் பயணத்திற்கு தகுதியற்றவர் என வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், பசில் ராஜபக்ஷ, நவம்பர் 18 முதல் 21 வரை இலங்கைக்குப் பயணிக்க விமானச் சீட்டுகளைப் பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வைத்திய அறிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிகம தெரிவித்துள்ளார்.
அவர் வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கிறார் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
வைத்திய அறிக்கைகளில் பசில் ராஜபக்ஷ, ஆறு மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவர் நவம்பர் 18 முதல் 21 வரை இலங்கைக்கு பயணிக்க விமானச் சீட்டுகளைப் பதிவு செய்து, பின்னர் அவற்றைத் தாமதமாக இரத்து செய்துள்ளார் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், பசில் ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து அவரது சட்டத்தரணிகள் குழு விரிவான வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கு மே மாதம் 22ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



